தணிக்கை முறை குறித்து
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரபுலக
எழுச்சி, ஆக்குபை வால்ஸ்ட்ரீட் என்று உலகம் தழுவிய அளவில் நடைபெறும் மக்கள்
போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் இணையத்தளம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஒரே
சமயத்தில் ஆளும் வர்க்கத்தின் பிரசாரக் கருவியாகவும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின்
ஆயுதமாகவும் இணையத்தளம் திகழ்கிறது
இருவகையான தணிக்கை முறைகள்:
சட்டப்பூர்வமான தணிக்கை
முறை.
தன் நாட்டின் பிரஜைகள்
எப்படிப்பட்ட படைப்புகளை நுகரலாம், ஊடகங்கள் எப்படிப்பட்ட செய்திகளை அளிக்கலாம்
என்பதை ஓர் அரசு நிர்ணயம் செய்து, சில விஷயங்களைத் தணிக்கை செய்கிறது. அதன்படி
பல்வேறு காரணங்களுக்காக ஒரு படைப்பு சட்டப்படி தணிக்கை செய்யப்படுகிறது. ஆபாசமான,
வக்கிரமான படைப்புகள், வன்முறையைத் தூண்டும் படைப்புகள், தேசத்தை பிளவுபடுத்தும்
படைப்புகள் என்று வகைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் அளவுகோல்கள் நிர்ணயம்
செய்யப்படுகிறது. இந்த அளவுகோல்களை மீறும் படைப்புகள் முழுமையாகவோ பகுதியளவிலோ
தணிக்கை செய்யப்படும். இது முதல் வகை தணிக்கை முறை. உதாரணத்துக்கு, டி.ஹெச்.
லாரன்ஸின் Lady Chatterley’s Lover, நபகோவின் Lolita ஆகிய நாவல்கள், அதிலுள்ள
‘ஆபாச உள்ளடக்கம்’ காரணமாகத் தணிக்கை செய்யப்பட்டன.
சட்ட விரோதமான தணிக்கை
முறை.
. சல்மான் ருஷ்டியும்
தஸ்லிமா நஸ்ரினும் எம்.எஃப். ஹுஸேனும் சட்டவிரோதமான தணிக்கை முறையையும்
ஒடுக்குமுறையையும் சந்தித்தவர்கள். முறைப்படி
இவர்களது படைப்புகள் தணிக்கை செய்யப்படவில்லை; தடை செய்யப்படவும் இல்லை. ஆனாலும், இவர்களுடைய
படைப்பு சுதந்தரம் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் இந்துத்துவ மற்றும் இஸ்லாமிய மத
பீடங்களும் அவர்களுடைய தீவிரவாத சித்தாந்தங்களும்தான்.
மாறாக, சித்தார்த்த
தேபும் அருந்ததி ராயும் சட்டப்பூர்வமான தணிக்கையையும் ஒடுக்குமுறையையும்
சந்தித்தவர்கள்.
எழுத்தாளர்களின்
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
ருஷ்டிக்கு இரானின்
கொமேனியும் தஸ்லிமாவுக்கு வங்கதேச இஸ்லாமிய அமைப்பும் தடையுத்தரவும் கொலை
உத்தரவும் பிறப்பித்தன. ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் இஸ்லாத்தின் இறைவனை
நேரடியாகப் பகடி செய்தது. தஸ்லிமாவின் லஜ்ஜா இஸ்லாத்தின் பிற்போக்குத்தனங்களைக்
கேள்விக்கு உட்படுத்தியது.வங்கதேசத்துக்கு இன்று
வரை தஸ்லிமா அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ருஷ்டி மீதான ஃபத்வா கொமேனியின் ஆட்சி
மாற்றத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டது. ஓர் இந்தியப் பிரஜை என்னும்
முறையில் ருஷ்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; முன்அனுமதி
பெறவேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமாவால், அவரது
விருப்பத்துக்குரிய ‘இரண்டாவது வீடான’ கொல்கத்தாவுக்கு இன்று வரை வரமுடியவில்லை.
மேற்கு வங்க அரசின் அனுமதியும் விசா நீட்டிப்பும் கிட்டவில்லை.
படைப்பாளிகளின் உரிமைகள்
பறிக்கப்படுவது இங்கு புதிதல்ல. ஒரு புத்தக விமரிசனத்தின் அடிப்படையில் ருஷ்டியின்
சாத்தானின் வேதங்கள் ராஜிவ் காந்தி அரசால் அக்டோபர் 1988ல் தடை செய்யப்பட்டது.
1990கள் தொடங்கி எம்.எஃப். ஹுஸைனுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து மிரட்டல்கள்
வரத் தொடங்கின. அவரது ‘ஆபாசமான’ படைப்புகள் அழிக்கப்பட்டன.
2002 குஜராத் படுகொலைகளை
மையமாக வைத்து எடுக்கப்பட்ட Parzania என்னும்
திரைப்படத்தை குஜராத் திரையரங்குகளில் திரையிடமுடியவில்லை.
இந்தியாவில் பிறந்த
கனடா எழுத்தாளரான ரோஹிந்தன் மிஸ்தரியின் Such a Long Journey பம்பாய்
பல்கலைக்கழகப் பாடப்பட்டியலில் இருந்து அக்டோபர் 2010ல் நீக்கப்பட்டது. தன் தாத்தா
பால் தாக்கரேயை அவமானப்படுத்தும் வகையில் அந்நாவல் எழுதப்பட்டதாக உத்தவ்
தாக்கரேயின் மகன் ஆதித்யா கருதியதாலும், பால் தாக்கரேயை அவமானப்படுத்துவது
‘மராத்தியர்களின் உணர்வை அவமானப்படுத்துவதற்குச் சமம்’ என்பதாலும் அந்நாவல்
மாணவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.
அவ்வாறே, ஏ.கே.
ராமானுஜனின் ராமாயணம் பற்றிய கட்டுரை டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து
நீக்கப்பட்டது. வெவ்வேறு வடிவில் 300 ராமாயணப் பிரதிகள் மக்களிடையே நிலவி வருவதைச்
சுட்டிக்காட்டியதற்காக சங் பரிவார் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு அடிபணிந்து இந்தக்
கட்டுரை விலக்கிக்கொள்ளப்பட்டது.
காஷ்மிர் பற்றி அருந்ததி
ராய் வெளியிட்ட கருத்துகளுக்காக அவர் அச்சுறுத்தப்பட்டார்.
Joseph Lelyveld எழுதிய
Great Soul, காந்தி பற்றிய ‘சர்ச்சைக்குரிய பகுதிகளைக் கொண்டிருந்ததால்’, நூல்
விற்பனை குஜராத்தில் தடை செய்யப்பட்டது.
சித்தார்த்த தேப் எழுதிய
இந்தியா குறித்த பயண-வரலாற்று நூலின் (The Beautiful and the Damned) முதல்
அத்தியாயம் சில்சார் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. குப்தா எலெக்ட்ரிக் எஞ்சினியர்ஸ் என்னும்
நிறுவனத்தைச் சேர்ந்தவரும் ஐ.ஐ.பி.எம் நிறுவனமும் இணைந்து தொடுத்த மானநஷ்ட
வழக்கின் அடிப்படையில், முதல் அத்தியாயத்தை நீக்கி புத்தகம் அச்சிடப்பட்டது. அரிந்தம் சவுத்திரியின் வர்த்தக உலகை முன்வைத்து, புகழ், செல்வாக்கு, செல்வம்
ஆகியவை இந்தியாவில் வளர்ந்த கதையை விவரிக்கும் அத்தியாயம் இது. தடையுத்தரவுக்குப்
பிறகு முதல் அத்தியாயம் நீக்கப்பட்டுவிட்டதால் முன்னுரைக்குப் பிறகு நேராக 72ம்
பக்கத்துக்குப் புத்தகம் நகர்ந்துவிடுகிறது.
சித்தார்த் தேப்.
‘சமகால இந்தியாவின் வரலாறு முழுமையாக உலகம் முழுவதிலும் கிடைக்கும் போது, இந்தியர்களுக்குப்
பகுதியளவு மட்டுமே கிடைக்கிறது என்பது சோகமான முரண்நகை.’ அவர் தொடர்கிறார். ‘ஆனால்
இதுவே இந்தியாவின் நிகழ்கால போக்கு பற்றி சில விஷயங்களைச் சொல்கிறது. அதிகாரத்தில்
உள்ளவர்களையும் செல்வந்தர்களையும் பற்றி எவ்வளவுதான் ஆய்வுப்பூர்வமாக எழுதினாலும்,
அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கவியலாது.’ தன் முன்னுரையை அவர் இவ்வாறு நிறைவு
செய்கிறார். ‘…உண்மையைச் சொல்லவேண்டும் என்னும் முயற்சியில்தான் இந்நூலைத் தொடங்கினேன்.
45 பக்கங்களை நீக்கியதன் மூலம் உண்மையின் ஒரு கை வெட்டப்பட்டுவிட்டாலும், மிச்சமுள்ள
பக்கங்களில் போதுமான அளவுக்கு உண்மை நிறைந்துள்ளது என்றே நம்புகிறேன்