Thursday, 6 February 2014

ஆவணப்படம்


ஓவியக்கலை, கட்டடக்கலை, நாடகக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை, இலக்கிய க்கலை, போன்றவற்றிற்கு அடுத்ததாக புதிதாகவும் மேலே கண்ட எல்லாக் கலைகளையும் உள்ளடக்கியதாகவும் தோன்றிய நவீனக் கலைதான் திரைப்படக்கலை. எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கருவியைக் கொண்டு 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள், பாரிஸில் உள்ள கிரேண்ட் கபே என்ற இடத்தில் லூமியர் சகோதரர்களால் இயக்கப்பட்ட 'புகைவண்டியின் வருகை' என்ற படம் காட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் மத்திய தலைமை புகைவண்டி நிலையம் அருகில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் எட்வர்ட்ஸ் என்ற ஆங்கிலேயரால் திரையிடப்பட்டது.

1916 ஆம் ஆண்டு நடராஜ முதலியார் என்பவர் 'கேசவதம்' என்ற தென்னிந்தியாவின் முதல் மௌனப்படத்தை எடுத்து வெளியிட்டார். 1916 முதல் 1932 வரை தென்னிந்தியாவில் 123 மௌனப்படங்கள் தயாரிக்கப்பட்டதாக தியோடர் பாஸ்கரன் தெரிவிக்கிறார்.
1931 ஆம் ஆண்டு தமிழில் முதல் பேசும் படமாக 'காளிதாஸ்' வெளிவந்தது.தஞ்சையைச் சேர்ந்த மருதப்ப மூப்பனார் என்பவர் சென்னை விமான நிலையத்தில் விமானம் வந்திறங்குவது, மற்றும் 1911இல் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவையும் படமெடுத்தார். சென்னை வேப்பேரியில் வாழ்ந்த ஜோசப் டேவிட் என்ற தமிழர் 1920,21களில் 'மகாபலிபுரத்து சிற்பங்கள்' 'நெல்லின் வளர்ச்சி' முதலிய படங்களை எடுத்து வெளிநாடுகளிலும் விற்றுள்ளார்.

கெயிட்டி திரையரங்கு முதலாளியான வெங்கையாவின் மகன், ரகுபதி பிரகாசாவும் சில ஆவணப் படங்களை எடுத்துள்ளார். மௌனப்பட உலகில் புகழ்பெற்றவரான சிவகங்கை நாராயணனும் அரசாங்கத்தின் சுகாதாரத்துறைக்காக 'தாய்மையும் குழந்தையும் பராமரிப்பும்' 'பாலியல் நோய்கள்' முதலிய ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளார்.

ஆவணப்படம் பெயர் வந்த வரலாறு
' 'டாக்குமென்டரி பிலிம்' (Documentary Film) என்ற என்பதற்கு இணையாக ஆவணப்படம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இச்சொல்லை தகவல்படம், விவரணப்படம், செய்திப்படம், என்றெல்லாம் அழைத்தார்கள்.

ஆவணப்படத்தின் முன்னோடியான ராபர்ட் ஃப்ளஹர்டி 1926ஆம் ஆண்டு 'மோனா' என்ற படத்தை எடுத்தார். இலண்டன் இயக்குனரான ஜான் கிரியர்ஸன், இப்படத்தை விமர்சனம் செய்யும் போது 'டாக்குமென்டரி' என்ற சொல்லை பயன்படுத்தினார். அதுமுதல் இச்சொல் புழக்கத்திற்கு வந்தது. ஏ.கே.செட்டியார் தனது கட்டுரை ஒன்றில் (1943) டாக்குமென்டரி படங்களை 'வாழ்க்கைச் சித்திரப் படம்' என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். இயக்குனர் கே.சுப்பிரமணியம் 'சாசனப்படம்' என்று குறிப்பிடுகிறார். கல்வெட்டுகள், மற்றும் பெரியபுராணம் முதலியவற்றில் ஆவணம், ஆவணக்களரி, போன்ற நல்ல தமிழ் சொற்கள் இடம் பெற்றுள்ளதால் அதனையட்டி 'ஆவணப்படம்' என்ற நல்ல பெயரை சூட்டியுள்ளனர்.

ஆவணப்படத்தின் இலக்கணம்
"யதார்த்த நிகழ்வை படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்" என்கிறார் கிரியர்ஸன். கதை தழுவாமல் யதார்த்தத்தை பிரதிபலிப்பவைகளே ஆவணப் படம.

ஆவணப்படத்தில் இருபத்தைந்து வகைகள் இருக்கின்றன. குறிப்பிடத்தக்கவை: செய்திப்படங்கள், வனவிலங்குகள், கல்வி சார்ந்தவை, மருத்துவம், இனவரலாறு, கட்டிடங்கள், வேளாண்மை, சூழலியல், பெண்ணியம், பறவையியல், மலையேறுதல், மெய்யியல், புராணீகம், அறிவியல் மற்றும் செய்தித் தொடர்பூடகங்கள், சுற்றுலா, வரலாறு நினைவிடங்கள், திருவிழாக்கள் போன்றவை.
இவ்வகைப் படங்களுக்கு கால அளவில்லை; முழு நீளப் படங்கள் அளவு இவையும் தயாரிக்கப்படுகின்றன.

குறும்படத்துடன் ஒப்பிடும்போது ஆவணப்படங்கள் குறைவாகவே எடுக்கப்படுகின்றன. இதன் விகிதாசாரம் 3:1 ஆகவே இருக்கிறது.

ஆவணப்படத்தின் சிறப்பு இயல்புகள்
திரைப்படம் என்பது முழுநீளப் படமாக (கதைப் படமாக) தொடங்குவதற்கு முன்னால் ஆவணப்படமாகவே தனது பயணத்தைத் தொடங்கியது. எதார்த்தத்தை அப்படியே பதிவு செய்வது அதன் குண இயல்பாக இருந்ததால் திரைப்படங்களில் எதார்த்தவாதம் இருக்க வேண்டியதின் அவசியத்தை ஆவணப் படங்களே உணர்த்தின. ஆவணப் படத்தின் கூறுகள் பலவற்றை முழுநீளத் திரைப்படங்களில் காணலாம்.

தமிழகத்தின் கலை, வரலாறு, பண்பாடு, தலைவர்கள் முதலியவர்களை ஆவணப் படுத்துவதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு பெரும் பயன் செய்கின்றனர். பழைய நாட்களில் வரலாற்றை கல்வெட்டு, செப்புப்பட்டயம், சுவடி, ஓவியம், சிற்பம், கட்டடங்ளில், புத்தகங்களில் பதிவு செய்தது போல இன்றைய மனிதர் நாகரீகங்களை ஊடகக் கருவிகளின் வளர்ச்சியை ஒட்டி நாம் ஆவணப் படங்களில் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
இந்திய அரசு பிரிட்டிஷாரின் காலனியாக இருந்ததால் தொடக்காலத்தில் எடுக்கப்பட்ட பல ஆவணப்படங்கள் அவர்களது ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. இதுபோல பிரெஞ்சு காலனியாக இருந்த புதுவை, காரைக்கால் பகுதிகளில் பிரெஞ்சுகாரர்கள் எடுத்த பல பதிவுகள் பாரீஸ் ஆவணக் காப்பகத்தில் உள்ளது.

சென்ற நூற்றாண்டில் தமிழர்கள் கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட நாடுகளான பர்மா, சிங்கபூர், மலேசியா, ஃபிஜி தீவு, தென்னாப்பிரிக்கா, டிரினிடாட், சீசெல்ஸ் தீவு, மொரீஷீயஸ் முதலிய நாடுகளுக்கு செல்லுகிற வாய்ப்புள்ள தமிழர்கள் அங்கே உள்ள தமிழர்களின் வரலாற்றுத் தடயங்களை தேடி எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதே போன்று உலகளவில் பயணிகளாக வந்தவர்கள் தமிழக சிற்பங்கள் கோவில்கள் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்த ஆவணப் படங்களை முறைப்படி தேட வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். ஏனெனில் தமிழகத்தைப் பற்றி எடுக்கப்பட்ட தொடக்க கால ஆவணப் படங்கள் ஒன்று கூட இல்லை.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆவணப்படங்கள்
1. மகாத்மா காந்தி - ஏ.கே.செட்டியார் - 1940
2. ஐ.என்.ஏ - சொர்ணவேல்
3. சுப்பிரமணிய பாரதியார் - அம்ஷன் குமார் - 1999
4. மெட்ராஸ் ஐ - அருண்மொழி - 1995
5. மறைந்து வரும் மரபுகள் - இந்து வர்மா
6. த புரொஃபைல் ஆஃப் டோயன் - பெண்ணேஸ்வரன்
7. தமிழ் சினிமாவின் கதை - ஷண்முகநாதன் மற்றும் சந்தான கிருஷ்ணன்
8. நீ எங்கே - ரமணி
9. நதியின் மரணம் - ஆர்.ஆர். சீனிவாசன்
10. இந்திரா பார்த்தசாரதி என்னும் கலைஞன் - ரவி சுப்பிரமணியம்
11. கே.ஆர்.அம்பிகா - அம்பை
12. தேவதைகள் - லீணா மணிமேகலை
13. ஜல்லிக்கட்டு - ராஜாங்கம்
14. பேசா மொழி - செந்தமிழன்
15. தீவிரவாதிகள் - அமுதன்
16. மரண கானா விஜி - ராம்
17. தளிர் ஒன்று சருகானது - சுஷ்மா கிருஷ்ணமூர்த்தி
18. எரியும் நினைவுகள் - சோமிதரன்
19. ராமையாவின் குடிசை - பாரதி கிருஷ்ணகுமார்
20. உங்களில் ஒருத்தி - ரேவதி
21. நொய்யல் தொலைந்த தடம் - பாலமுருகன்
22. இரவுகள் உடையும் - மாதவராஜ்
23. அகவிழி - பி.என்.எஸ். பாண்டியன்
24. இடைச்சேவல் - புதுவை இளவேனில்
25. அண்ணா எனும் பெருங்கடலில் சிறுதுளி - கோவி. லெனின்
26. நாடக இராமானுஜம் . அண்ணாமலை

நன்றி- தமிழ் ஸ்டுடியோ

ஆவணப்படம்