Pages - Menu

MAIN MENU

Wednesday, 15 January 2014

அறிவுசார் சொத்துரிமை / அறிவாற்றல் உரிமை

IPRs என்பது இன்று உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் "அறிவு" சமுதாயத்திற்கு ஒரு இன்றியமையாத கருவியாக உருவெடுத்துள்ளது..உலகச் சந்தையில் போட்டியிட அறிவியல் தொழில் நுட்பத்தின் புதிய கருத்துக்கள் அவசியமாகிறது.இந்தக் கருத்துக்கள் செல்வங்களாக மாற்றப்படுகின்றன.புதிய உத்திகளை உருவாக்குவதற்கு IPR –க்கு சிலகாலம் தேவைப்பட்டது. வெளிநாட்டு முதலீடு மற்றும்தொழிநுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற சூழல்களில் ஒரு தரமான IPR ன் பங்கு குறிப்பிடத்தக்கது. 


அறிவுசார் சொத்துரிமையை இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள்.
 1). காப்புரிமை அல்லது பதிப்புரிமை(Copyright).
எழுத்தாளர்களின் படைப்புகள், இசை படைப்புகள், ஓவியங்கள், சிற்பங்கள், கணினி மென்பொருளாக்கம், திரைப்படம் ஆகியவற்றிற்கு காப்புரிமை உண்டு.  படைப்பாளர் இறந்து 5௦ ஆண்டுகள் வரை காப்புரிமை அமலில் இருக்கும்.


2). தொழில்சார் சொத்துரிமை (industrial property right).
 Trademark, Logo, தொழில் ரகசியங்கள் (உதாரணத்திற்கு coca  cola வின் formula), புதிய கண்டுபிடிப்புகள், புவிசார் குறியீடு (Geographical Indication) ஆகியவை தொழில்சார்  சொத்துரிமையில் அடங்கும். 
 தமிழர்களின் கை வண்ணத்தை பறைசாற்றும் பாரம்பரிய பொருட்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் வீணை, நாச்சியார்கோவில் விளக்கு மற்றும் பத்தமடை பாய்க்கு புவிசார் அந்தஸ்து வழங்க மும்பையில் உள்ள அறிவுசார் சொத்து உரிமை அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன்வாயிலாக இந்திய சந்தை உள்பட உலக சந்தையில் இந்த பொருட்களின் போலிகள் விற்பனை தடுக்கப்படும்.இந்தியாவில் இதுவரை 172 பொருட்களுக்கு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்து வழங்கப்படுவதன் வாயிலாக  இந்திய சந்தையில் மட்டும் அல்லாது சர்வதேச சந்தையிலும் போலிகள் புழக்கம் தடுக்கப்படும். இந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். கோவை கோரா காட்டன் புடவைகள், சிறுமலை ஹில் வாழைப்பழம் மற்றும் சுவாமி மலை செம்பு சிலைகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பொருட்களுக்கு  புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

புதிய கண்டுபிடிப்புகளுக்கான உரிமை (Patents), பொதுவாக, 20 வருடங்களுக்கு அளிக்கப் படுகிறது.படைப்பாளி, வணிக நிறுவத்தினர் ஆகியோரின் உரிமையை பாதுகாக்கவும், புதிய படைப்புகள், முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த உரிமைகள் தரப்படுகின்றன.


பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.



காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஓவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.



முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.

சர்வதேச பதிப்புரிமை சட்டம்: இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்பிற்க்கான பெர்ன் மாநாடு


இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது. இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும். இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை , இலக்கிய , அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்பு தர வலியுறுத்துகிறது. மேலும் இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக தேசிய நடத்துமுறையைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.பத்திரிக்கை செய்தி

ராயல்டி 

புத்தக விற்பனையில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வருமானத்துக்கு ராயல்டி என்று பெயர். தங்கள் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட முடியாதவர்கள் பதிப்பாளர்களை நாடிச் செல்கிறார்கள். பதிப்பாளர்களால் புத்தகங்களை எளிதில் சந்தைப்படுத்த முடிகின்றது. ஒரு புத்தகம் மக்களிடையே பேராதரவைப் பெற வேண்டுமென்றால் நல்ல எழுத்தாளரும் தேவை, நல்ல பதிப்பாளரும் தேவை. புத்தக வியாபாரத்தில் பதிப்பாளரைச் சார்ந்து எழுத்தாளரும், எழுத்தாளரைச் சார்ந்து பதிப்பாளரும் இருக்கின்றனர். பதிப்பாளரும், எழுத்தாளரும் ஒரு குறிப்பிட்ட விகிதக்கணக்கில் பங்கிட்டுக் கொள்கிறார்கள். புத்தக விற்பனையில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் வருமானத்துக்கு ராயல்டி என்று பெயர்.

  • பிரபலமான எழுத்தாளர் என்றால் அதிகமான ராயல்டி கிடைக்கும்.ஹாரி பாட்டர் புத்தகங்களை எழுதி வரும் ஜே.கே.ரவுலிங் என்ற எழுத்தாளருக்கு ஸ்காலஸ்டிக் என்ற புத்தக நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்பணமாக கொடுத்தது. ரவுலிங் எழுதிய சார்சரர்ஸ் ஸ்டோன் என்ற புத்தகம் உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்ந்தன.




புத்தகத்தின் பதிப்புரிமை எழுத்தாளரிடமா? அல்லது பதிப்பாளரிடமா?

ஒப்பந்த அடிப்படையில் ஒரு எழுத்தாளர் பதிப்பாளருக்கு புத்தகம் எழுதிக்கொடுத்தார் என்றால், அந்த ஒப்பந்தத்தின்படி பதிப்பாளரிடம்தான் பதிப்புரிமை இருக்கும். சில சமயங்களில் எழுத்தாளரிடம் மட்டுமே புத்தகத்தின் பதிப்புரிமை இருக்கும். 

கேரள நீதிமன்றத்தின் வி.டி.தாமஸ் -எதிர்- மலையாள மனோரமா (AIR 1989 Ker 49)  என்ற வழக்கில் வெளியிட்ட தீர்ப்பு பிரபலமானது.http://bobanandmoly.com/tom's_page.php

வி.டி.தாமஸ் மலையாள மனோரமா என்ற பத்திரிகை நிறுவனத்தில் கேலிச் சித்திர ஓவியராக வேலை பார்த்து வந்தார். அவர் ஊழியராக இருந்த சமயத்தில் மலையாள மனோரமா பத்திரிக்கைக்கு நிறைய கார்டூன்களை வரைந்துவந்தார். அதில் 'போபன் மற்றும் மோளி' என்ற கார்டூன்கள் மிகவும் பிரபலமானவை. மலையாள மனோரமா இந்த கார்டூன்களை வைத்து நிறைய படைப்புகளை வெளியிட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வி.டி. தாமஸ் மலையாள மனோரமா நிறுவனத்தை விட்டு வெளியேறி, கலா கௌமுதி என்ற பத்திரிக்கைக்கு 'போபன், மோளி' கார்டூன்களை வரைந்து கொடுத்தார். மலையாள மனோரமா வி.டி. தாமஸ் மீது வழக்கு தொடர்ந்தது.  வி.டி.தாமஸ் தங்களுடைய நிறுவனத்தில் சம்பளத்திற்காக வேலை பார்த்தபோது உருவாக்கிய கார்டூன்கள்தான் இந்த போபன், மோளி'. ஆகவே, இந்த கார்டூன்களின் மீதான பதிப்புரிமை தங்களுடையது என்றது மலையாள மனோரமா தரப்பு. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவுக்காக வரைந்து கொடுத்த போபன், மோளி'  கார்டூன்களின் பதிப்புரிமை மலையாள மனோரமாவிடம் இருப்பதாகவும், அதைத் தவிர வி.டி.தாமஸ் மலையாள மனோரமாவை விட்டு வெளியே வந்த பிறகு வரைந்த ஏனைய போபன், மோளி'  கார்டூன்களின் மீது மலையாள மனோரமா சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பை வெளியிட்டது.

சரி, ஒரு எழுத்தாளருக்கு தன்னுடைய படைப்புகளின் மீது எத்தனை ஆண்டுகள் பதிப்புரிமை இருக்கிறது? அவரது ஆயுள் முழுவதற்கும் உண்டு. பின்னர் அவர் இறந்து ஒருவருடம் கழிந்து 60 ஆண்டுகள் வரை அவருடைய வாரிசுகளுக்குப் பதிப்புரிமை உண்டு. பதிப்புரிமை காலம் முடிந்த பிறகு, ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பொதுவில் வந்துவிடும். பொதுவில் வந்த பிறகு அந்த புத்தகத்தை யார் வேண்டுமானாலும் அச்சிடலாம், வியாபாரம் செய்யலாம். எழுத்தாளரின் வாரிசுகளுக்குப் பதிப்பாளர்  ராயல்டி வழங்கவேண்டிய அவசியம் இல்லை.

பதிப்புரிமை நிலுவையில் உள்ள காலம் வரை ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பைப் பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்யலாம். அதே போல் ஒரு எழுத்தாளர் தான் எழுதப்போகும் புத்தகத்துக்கும் உரிமை மாற்று ஒப்பந்தம் செய்யலாம். ஆனால் அந்த ஒப்பந்தம் புத்தகம் வெளியிட்டபிறகுதான் அமலுக்கு வரும். இந்த உரிமை மாற்றம் பதிப்புரிமை காலம் முழுமைக்கும் இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கும் இருக்கலாம். எவ்வளவு காலத்துக்கு உரிமை மாற்றம் இருக்கவேண்டும் என்பது ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் எடுக்க வேண்டிய முடிவு.

உரிமை மாற்றம் எழுத்துப்பூர்வமாகத்தான் இருக்கவேண்டும். வாய்மொழி ஒப்பந்தம் செல்லுபடியாகாது. உரிமை மாற்று ஒப்பந்தத்தில் எந்த படைப்புக்காக உரிமை மாற்றம் செய்யப்படுகிறது, என்னவிதமான உரிமைகளெல்லாம் பதிப்பாளருக்கு வழங்கப்படுகிறது, எந்தெந்த இடங்களிலெல்லாம் சம்மந்தப்பட்ட படைப்புகளை விற்கலாம், எத்தனை ஆண்டுகளுக்கு இந்த உரிமை மாற்றம் செல்லும் என்பன போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும். ஒப்பந்தத்தில் உரிமை மாற்று காலம் குறிப்பிடப்படவில்லை என்றால் அது ஐந்தாண்டுகளுக்கு மட்டும்தான் என்று பதிப்புரிமை சட்டம், 1957 தெரிவிக்கிறது. மேலும் ஒப்பந்தத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் புத்தகம் விற்கப்படலாம் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை என்றால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தகத்தின் பிரதிகளை விற்கலாம் என்பதுதான் அதன் சட்டப்படியான அர்த்தம்.

பதிப்புரிமை உரிமை ஒப்பந்தம், உரிமை மாற்று ஒப்பந்தம் ஆகியன இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை.

 முன்னாள் பிரதமர் நேருவின் சுயசரிதத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட சா.கணேசன் என்பவர் உரிமம் பெற்றிருந்தார். சா.கணேசன் நேருவுக்கு முறையாக ராயல்டி தராததால், நேரு அந்த உரிமையை ரத்து செய்துவிட்டு, புக்ஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு உரிமையை வழங்கியிருக்கிறார். இருந்தபோதிலும் சா.கணேசனுடன் தொடர்புடைய திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் நேருவின் சுயசரிதத்தை தமிழில் வெளியிட்டது. இதை எதிர்த்து புக்ஸ் இந்தியா நிறுவனம் திருமகள் அண்ட் கோ நிறுவனத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கில் திருமகள் அண்ட் கோ தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்,  நேரு தனது சுயசரிதை புத்தகத்தின் உரிமை மாற்றம் சம்மந்தமாக பிரேத்யேகமாக எந்த ஒரு ஒப்பந்தத்திலும் வாதி நிறுவனத்துடன் ஈடுபடவில்லை என்பதாகும். ஆனால் புக்ஸ் இந்தியா தரப்போ,  நேருவின் பிரதிநிதி நேருவின் விருப்பத்திற்கிணங்க எங்கள் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில், திருமகள் அண்ட் கோ என்ற நிறுவனம் தன்னுடைய சுயசரிதத்தை தமிழில் வெளியிட எந்த அதிகாரமும் இல்லை என்றும், எங்கள் நிறுவனமே தன்னுடைய சுயசரிதத்தை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நேரு’ என்று கூறியதோடு,  நேரு எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. கடிதத்தை பரிசீலித்த நீதிபதிகள், பதிப்புரிமை சட்டத்தின் கீழ் பதிப்புரிமை உரிமை மாற்றத்துக்கென பிரேத்யேக ஆவணங்கள் ஏதும் தேவையில்லை, கடிதத்தின் மூலமாகக் கூட ஒரு படைப்பாளி தன்னுடைய பதிப்புரிமையை மற்றவருக்கு மாற்றம் செய்து கொடுக்கலாம் என்ற தீர்ப்பை வெளியிட்டது  (AIR 1973 Mad 49)

பதிப்புரிமைச் சட்டம், 1957 
இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான முதன்மைச் சட்டம் இந்திய காப்புரிமைச் சட்டம், 1957 ஆகும். 1941-இல் முதன் முதலில் பதிப்புரிமைச் சட்டம் செயல்படுத்தப்பெற்றது. இப்பொழுது நடைமுறையிலிருப்பது, திருந்திய முறையில் இந்திய நாடாளுமன்றம் 1957இல் நிறைவேற்றிய பதிப்புரிமைச் சட்டம்.
1847ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய பதிப்புரிமைச் சட்டத்தை இயற்றியது. காலப்போக்கில் அச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. எனவே 1914-ஆம் ஆண்டு மத்திய சட்டசபை, பிரிட்டனில் இருந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து சில மாற்றங்களுடன் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இந்த சட்டமே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நீடித்தது. இந்திய பதிப்புரிமைச் சட்டம் 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1984, 1994,1999,2010 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடைசியாக 2012 ஆம் ஆண்டில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.


சட்ட விளக்கம்

ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால் அது முழுக்க அவரது சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொண்டாட இயலாது. கருத்துக்களுக்கோ, ஒருவரும் உரிமை கொண்டாட இயலாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும். ஒரு அதற்குப் பதிப்புரிமை கிடைக்கின்றது.
இந்தச் சட்டத்தின் 45ஆம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இலக்கிய படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றுக்குப் பதிப்புரிமை படைப்பாளியின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும். அவர் காலத்திற்குப் பின்பு அறுபதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததியினருக்கு உண்டு. புகைப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு பதிப்புரிமை வேளியாகி அறுபதாண்டுகளுக்குப் பின்பு காலாவதியாகிறது. அதன் பின்னர் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.


விதிவிலக்குகள்

இச்சட்டத்தின்படி ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டிற்காகவோ சில பகுதிகளை எடுத்துப்பயன்படுத்துவது குற்றமாகாது. நியாயமான முறையில் மேற்கோள்காட்டவோ சரியான முறையில் சுருக்கத்தைக் கூறவோ சட்டம் வாய்ப்பளிக்கின்றது. ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும் பொழுது மூலத்தைக் குறிப்பிட வேண்டும்.
செய்தித்தாட்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன. இதழ்கள் பொது நலன் கருதி, எந்த இலக்கியப் படைப்பையும், நாடகத்தையும், இசையையும் வெளியிடலாம், இது நடப்புச் செய்திகளை வெளியிடும் வகையில் சேரும். ஆனால் இதழில் வெளியான கட்டுரையை, அப்படியே சொல் மாறாமல் வெளியிட வேண்டுமானால் அந்த இதழின் அனுமதி பெற வேண்டும்.


இந்திய பதிப்புரிமைச் சட்டம் - 1999


  1. ·         ஒரு படைப்பாளி தனது படைப்பை மறுபிரசுரம் செய்யலாம்.
  2. ·         பிறமொழிகளில் பெயர்த்துக் கொள்ளலாம் அல்லது மற்றவர்கள் மொழியாக்கம் செய்ய அனுமதிக்கலாம்.
  3. ·         வேறு வடிவங்களில் மாற்றிக் கொள்ளலாம். அதாவது ஒருவர் தனது பாடலை இசைத்தட்டிலோ, ஒலி நாடாவிலோ, வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ இடம் பெறச் செய்யலாம்.
  4. ·         ஒருவர் தனது கதையை, கவிதையை, வசனத்தை புத்தக வடிவமாக மட்டுமின்றி விஞ்ஞானம் இன்று வரை வழங்கியுள்ள நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, கணினி போன்ற சாதனங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்
  5. ·         தனது படைப்பைப் பகுதியாகவோ, முழுமையாகவோ குறிப்பிட்ட கால அளவிற்கு - எல்லைப் பரப்பிற்கு - வாடகைக்கு விடலாம் அல்லது விலைக்கு விற்கலாம்.
  6. ·         தனது படைப்பு சம்பந்தமான உரிமையைத் தான் விரும்பும் நபருக்கு, நிறுவனத்திற்குத் அமைப்புக்கு வழங்கலாம். அல்லது தேவைப்பட்டால் அதைத் திரும்பப் பெறலாம்.

பதிப்புரிமைக் குறிய கால அளவு

ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பின் மீது உள்ள உரிமையை இந்திய பதிப்புரிமைச் சட்டம் உத்திரவாதம் செய்துள்ளது. அதன்படி அச்சிடப்படும் படைப்பாக இருந்தால் அப்படைப்பின் மீதான உரிமை அவரது மறைவிற்குப் பின் அவரது பெயருக்கு முதலில் 50 ஆண்டு காலம் வழங்கியது. இப்போது அது 60 வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவோ, இசையாகவோ இருந்தால் அது வெளியிடப்படும் தேதியிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் ஒலிபரப்பப்பட்டால் 25 ஆண்டுகளுக்கும் அதற்கான உரிமை அவற்றின் படைப்பாளிகளுக்கு நீடிக்கிறது.


இந்திய பதிப்புரிமைச் சட்டம் - 2012

கலை,இலக்கியம் மற்றும் இசைத் துறை என அனைத்து துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க சட்டத் திருத்தம் இது. உதாரணமாக திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

பதிப்புரிமை உரிமை மாற்று ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஏனைய உரிமை மாற்றத்துக்கு விதிக்கப்படும் முத்திரைத் தீர்வை (Stamp Duty)  இதற்கு கிடையாது. அதேபோல் பதிப்புரிமை உரிமை மாற்று ஆவணத்தை, மற்ற ஆவணங்கள் போல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை. பதிப்புத்துறை நன்கு வளர வேண்டும், நாட்டில் மக்கள் படிப்பதற்கு புத்தகங்கள் மலிவான விலையில் கிடைக்கவேண்டும் என்ற நோக்குடன் மேற்குறிப்பிட்ட ஒப்பந்தங்கள் சார்பாக முத்திரைத் தீர்வை வசூலிப்பதிலிருந்தும், பதிவுசெய்வதிலிருந்தும் விதி விலக்கு செய்யப்பட்டிருக்கிறது. உரிமை மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பதிப்பாளர் ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்ட ஓர் ஆண்டுக்குள் செயல்படுத்தவில்லை என்றால் அந்த உரிமைகள் ரத்தாகிவிடும். ஆனால் ஒப்பந்தத்தில், ”பதிப்பாளர் எழுத்தாளரிடமிருந்து பெற்ற உரிமைகளை செயலபடுத்தாத போதிலும் சம்மந்தப்பட்ட ஒப்பந்தம் ரத்தாகாது” என்று ஷரத்து இருந்தால் மேலே சொன்ன சட்ட விதி பதிப்பாளரைப் பாதிக்காது. ஏனைய சமயங்களில், பதிப்பாளர் தனக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ச்செயல்படுத்தத் தவறும் பட்சத்தில், எழுத்தாளர் பதிப்புரிமை வாரியத்திடம் புகார் அளிக்கலாம். பதிப்புரிமை வாரியம் புகாரை விசாரித்து எழுத்தாளர், பதிப்பாளருக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யும். அதே போல் ஒப்பந்தம் சம்பந்தமாக எழுத்தாளருக்கும், பதிப்பாளருக்குமிடையே ஏதேனும் சண்டை சச்சரவு, ராயல்டி தொடர்பாகவோ அல்லது ஏனைய காரணங்களுக்காகவோ ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புரிமை வாரியத்திடம் புகார் செய்யலாம். புகாரை விசாரித்து பதிப்புரிமை வாரியம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். தேவைப்பட்டால் உரிமை மாற்று ஒப்பந்தத்தையே ரத்து செய்யலாம். ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பரிகாரத்தை எழுத்தாளர் நலன் கருதி தேவைப்பட்டால் மட்டுமே வழங்க வேண்டும் என்று சட்டம் வரையறை அளிக்கிறது. மேலும் சட்டம் இன்னொரு நிபந்தனையயும் முன்வைக்கிறது. அதாவது ஒப்பந்தம் செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு உள்ளாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பதிப்புரிமை வாரியத்திற்கு அதிகாரமில்லை.
பதிப்புரிமைச் சட்டம், 1957 ஒரு எழுத்தாளருக்கு பதிப்புரிமையைத் தவிர மேலும் ஒரு உரிமையை வழங்கியிருக்கிறது. அதன் பெயர் தார்மிக உரிமை. எழுத்தாளர் தன்னுடைய படைப்பை பதிப்பாளருக்கு உரிமை மாற்றம் செய்து விட்டாலும் கூட அந்த படைப்பின் மீதான எழுத்தாளரின் தார்மீக உரிமையை பதிப்பாளர் உட்பட வேறு யாரும் மறுக்க முடியாது.

ஒரு படைப்பாளியின் தார்மீக உரிமைகள் 

ஒரு படைப்பின் ஆசிரியர் தானே என்று பறைசாற்றும் உரிமை; தன்னுடைய படைப்பை மற்றவர்கள் திரித்துக் கூறாமல், உருக்குலைக்காமல், மாற்றி அமைக்காமல் இருத்தல். அவ்வாறு யாரேனும் செய்தால் அவர்களைத் தடுக்கவும், அவர்களிடமிருந்து நஷ்டயீடு பெறவும், ஒரு எழுத்தாளரின் தார்மீக உரிமை வழிவகை செய்கிறது.


சிறைத் தண்டனை

இந்தியாவில் படைப்புகளைத் திருடுவோருக்கு குறைந்த பட்சம் 6 மாதமும், அதிக பட்சம் ஒரு வருடமும் தண்டனை என்று 1957 ஆம் ஆண்டின் சட்டம் அறிவித்தது. 1984 ஆம் ஆண்டின் சட்டத்திருத்தம் அதிகபட்ச தண்டனையை 3 ஆண்டுகளாக உயர்த்தியது. அது மட்டுமின்றி குறைந்தபட்ச அபராதம் 50 ஆயிரம் ரூபாய் என்றும் அதிகபட்ச அபராதம் 3 லட்சம் ரூபாய் என்றும் விதித்தது.
இதே குற்றத்தை இரண்டாவது முறையாகச் செய்பவருக்குக் குறைந்த பட்ச சிறைத் தண்டனை ஒரு வருடமாகவும், குறைந்தபட்ச அபராதம் ஒரு லட்சமாகவும் விதிக்கப்பட்டதுடன், குற்றவாளி ஜாமீனில் விடப்படாமல் கட்டாய சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் அது அறிவித்தது.http://ta.wikipedia.org/s/3en

1 comment:

  1. உபயோகமான பகிர்வு,நன்றி ஜோசபின்...

    ReplyDelete